உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக 7 பேரிடம் ரூ. 10. 50 லட்சம் மோசடி - வாலிபர் கைது
கடலூர் மாவட்டத்தில் 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 10,55,000 மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த அருண்குமார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 நவம்பர் மாதம் தனியார் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தை பார்த்து அதன் மூலம் தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர் தீபக் மற்றும் அதில் பணிபுரிந்த ஊழியர் பவதாரணி ஆகிய2 பேரும் தாங்கள் பல நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால் கண்டிப்பாக தன்னை சிங்கப்பூர் நகை கடை சேல்ஸ்மேன் வேலைக்கு அனுப்புவதாக கூறினார்கள்.
இதனை தொடர்ந்து 65 ஆயிரம் பணம் அளித்துள்ளேன். இதனை தொடர்ந்து நெய்வேலி மந்தாரக்குப்பம் அருண், சிதம்பரத்தை சேர்ந்த சிவக்குமார், கில்லியை சேர்ந்த சதீஷ்குமார் பெரியப்பட்டு வினோத்குமார் வாண்டயான்பள்ளம் சீனிவாசன், பெராம்பட்டு பிரபு, ராதா விளாகம் கிராமத்தை சேர்ந்த கற்பகவல்லி என்பவரிடம் அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதன்படி மொத்தம் 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 10,55,000 மோசடி செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த வசபுத்தூர் சேர்ந்த தீபக் என்பவரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைகாவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குருசாமி தலைமையிலான போலீசார் சென்னையில் திருமுல்லை வாயில் பொத்தூர் அருகில் பதுங்கி இருந்த நபரை ரகசிய தகவலின் பேரில் கைது செய்தனர்.
இவர் மேலும் பல நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி மோசடி செய்து இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.