உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் கூட்டணி அறிக்கை

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை

Published On 2022-02-10 15:07 IST   |   Update On 2022-02-10 15:07:00 IST
ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
சிவகங்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021&22 கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 2 மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறை கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. 

அதுவும் இந்த காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறை சுழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதி முதல் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஏற்கனவே கடந்த ஜனவரி 10ந்தேதி தொடங்கி பிப்ரவரி 2ந் தேதி முடிய 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி நடத்தப்பட்டது. குடிப்பதற்கு  தண்ணீர் கூட கொடுக்காத பயிற்சி என்று பெயர் பெற்ற அப்பயிற்சி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.2.2022 முதல் 9.4.2022 வரை 2 மாத காலம் ‘எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி’ என்ற பெயரில் இணைய வழியில் பயிற்சி அளிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சியின் மீது சலிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சி கட்டத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடைய செய்துள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020ன் உட்கூறுகள் என்பதையும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது. 

தேசிய கல்விக்கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இது போன்ற செயல்கள் தொடருமானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கி போராடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News