உள்ளூர் செய்திகள்
தேவகோட்டையில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பழைய சருகணி சாலை யோகி ராம்சுரத்குமார் காலனியை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மனைவி மீனாட்சி ஆச்சி(வயது 62).
இவர் காந்திரோடு மரக்கடை முன்பு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தங்களை போலீஸ் என்று கூறி தங்க நகைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவாறு உங்கள் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
அப்போது மீனாட்சி ஆச்சி, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கசெயினை எடுக்க முயற்சி செய்தார். அப்போது அந்த மர்மநபர்கள் அவரிடமிருந்து செயினை பறித்துக்கொண்டு தப்பிஓடினர். அதிர்ச்சியடைந்த மீனாட்சி ஆட்சி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து மீனாட்சி ஆட்சி தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேவகோட்டை நகரில் போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகைபறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.