உள்ளூர் செய்திகள்
திமுக

கடலூர் மாவட்டத்தில் 8 தி.மு.க. வேட்பாளர் உள்பட 10 பேர் போட்டியின்றி தேர்வு

Published On 2022-02-09 16:15 IST   |   Update On 2022-02-09 16:15:00 IST
கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் போட்டியின்றி புதிய கவுன்சிலர்கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1994 பேர் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக மொத்தம் 2,558 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 38 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 516 பேர் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனர். இதில், மாவட்டத்தில் 10 இடங்களில் போட்டியின்றி புதிய கவுன்சிலர்கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1994 பேர் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் போட்டி நிலவுகிறது. இங்கு, 286 பேர் போட்டியிடுகின்றனர். வடலூர் நகராட்சியில் 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சித்ராசங்கர், 16-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயராகவன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தமயந்தி செங்கல்வராயன், மங்கலம்பேட்டையில் பெண்ணாடம் பேரூராட்சி 2-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சண்முகப்பிரியா, காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி 18-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 14-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்செல்வி தங்க ஆனந்தன், கிள்ளை பேரூராட்சி 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவழகன், 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மல்லிகா, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்க. குலோத்துங்கன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

Similar News