உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் காரி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து பராமரித்து வந்தார்.
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இந்த காளை பங்கேற்றது மட்டுமல்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு செல்லும்போது ஊரில் உள்ள இளைஞர்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைப்பார்கள்.
இந்த நிலையில் ஜெயபால் வளர்த்து வந்த காரி என்று பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் மனிதரின் இறப்புக்கு வருவது போல பூ மாலை, வேட்டி, துண்டு என கொண்டு வந்து கோடி எடுத்து, மாட்டிற்கு மஞ்சள் தடவிய வேட்டியை போர்த்தினர்.
பெண்களும், இளைஞர்களும் கதறி அழுதனர். பின்னர் ஜெயபாலுக்கு சொந்தமான தோட்டத்தில் காளையை அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.