உள்ளூர் செய்திகள்
ஆதீனம் பட்டணப்பிரவேசத்தில் எழுந்தருளினார்.

திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார்

Published On 2022-02-08 15:12 IST   |   Update On 2022-02-08 15:12:00 IST
திருவாவடுதுறையில் சிவிகாரோஹணம் செய்து ஆதீனம் பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இதற்கு எதிராக போராட்டம் நடத்திய தி.க.வினர் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

10&ம் நாளான நேற்று, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றது. இதையடுத்து இரவு பட்டணப் பிரவேசம் நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது

 என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் கலைந்து போகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால் 85 பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப்  பிரவேசம் எழுந்தருளினார். 

இதில் சூரியனார்கோவில் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News