உள்ளூர் செய்திகள்
பிள்ளையார்பட்டி அருகே பிரசித்திபெற்ற வயிரவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே என்.வைரவன்பட்டியில் வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்பாள் வயிரவர்சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் கி.பி.712ல் கட்டப்பட்டது.
நகரத்தார்களின் 9 கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. சிவனைப்போல ஐந்து தலையுடன் இருந்த பிரம்மா அகந்தையுடன் இருந்ததாகவும், சிவன் தனது அம்சமான வயிரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார் என்றும், இவரே இத்தலத்தில் வயிரவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் என்ற தல வரலாறு உள்ளது.
பழமையான இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. ஆகம விதிப்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
கோவில் கோபுரம் சீரமைத்து வர்ணம் பூசும் பணி முடிவடைந்த பின் கடந்த வாரம் கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப கட்ட பூஜைகள் நடைபெற்றன. இதற்காக கோவில் முன்பு பிரமாண்டயாக சாலைகள் அமைத்து பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது கோவிலை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைகோஷமிட்டு தரிசனம் செயதனர்.