உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை அருகே 2500 ஆண்டிற்கும் முற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை அருகே 2500 ஆண்டிற்கும் முற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி வெங்கலமேட்டில் இரும்பு மற்றும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் கழகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினர் சென்று ஆய்வு நடத்தினர்.
இதில் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் கெடுமணலில் உள்ளதை போல பெருங்கற்கால பலகை கல்லில் துளையுடைய கற்கள், 20&க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள், 50&க்கும் மேற்பட்ட கற்குவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழங்காலத்தில் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் கற்களை குவித்து வைப்பது கற்குவையாகும். இக்குவைகள் சில சேதமடைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் கிடைக்காத செம்புரான் கற்கள் கற்குகைகளை சுற்றி கல் வட்டம் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லறையில் பயன்படுத்தப்பட்ட கற்பலகைகள் நீளம் 9 அடியாகவும், அகலம் 7 அடியாகவும், தடிமன் முக்கால் அடிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.
இங்கு அனைத்து வகையான ஈமச்சின்னங்களும் இருப்பது கண்டெடுக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் விவசாய பணிகள் வருவாய்த்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை பாதுகாக்க உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.