உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.

பறக்கும்படை சோதனையில் பணம் பறிமுதல்

Published On 2022-02-03 15:23 IST   |   Update On 2022-02-03 15:23:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ. 2.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் களைகட்ட தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தலில் பணப்பட்டு வாடா, அன்பளிப்பு வழங்குதல் போன்றவற்றை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சிங்கம்புணரி ரோட்டில் வட்டாட்சியர் சாந்தி, சப்&இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீஸ்காரர்கள் குணசேகரன், பாண்டி, மலைச்சாமி ஆகியோர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்டம் போடியில் இருந்து திருமயத்திற்கு சென்ற சரக்கு வேனை மறித்து பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.

அந்த வேனில் திருமயத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி முகமது அனிபா(வயது22) என்பவர் ரூ.94ஆயிரத்து500 வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் தம்பிபட்டி பைபாஸ் ரோட்டில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் வந்த கருங்குளத்தை சேர்ந்த முருகன்(54) என்பவர் ரூ.52 ஆயிரத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.  போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் பறக்கும் படை அதிகாரி நெப்போலியன், போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் வாகனசோதனை நடந்தது. அப்போது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி சென்ற வாகனத்தை சோதனை செய்தபோது வெங்கடேஷ் என்பவர் ரூ‌. 1 லட்சத்து 28 ஆயிரத்தை ஆவணம் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

பணம் கொண்டு வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை காட்டி அதனை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆவணம் இன்றி கொண்டு சென்றதாக ரூ 2.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News