உள்ளூர் செய்திகள்
மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.
சிவகங்கை
தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சபானா, அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, கோயம்புத்தூரிலும், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.திவ்யா அரசு மருத்துவக்கல்லூரி ராமநாத புரத்திலும், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.மாதேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி சிவகங்கையிலும் மற்றும் மாங்குடி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஸ்நேகா செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி கிருஷ்ணகிரி என மொத்தம் 4 மாணவிகளுக்கு இட ஒதுக் கீட்டிற்கான ஆணைகள் பெறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் வரும் ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இதுபோல் மருத்துவப்படிப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதி, அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.