உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சரக்கு ஆட்டோவிற்கு தீவைத்த மர்ம நபர்களுக்கு வலை

Published On 2022-02-02 10:53 IST   |   Update On 2022-02-02 10:53:00 IST
சரக்கு ஆட்டோவிற்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி குலப்பெண்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் சரக்கு ஆட்டோ சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் காலையில் ஆட்டோவை எடுத்துக் கொண்டு தொழிலுக்கு சென்றால் மாலையில் தான் வீடுதிரும்புவார். அப்போது வாகனத்தை தன் வீட்டின் அருகில் உள்ள பழைய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாகம் எதிரில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் இதே போல் நேற்றிரவு வாகனத்தை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் இவரது  சரக்கு ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். தீ மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர், தெய்வேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வீட்டிலிருந்து விரைந்து வந்து பார்ப்பதற்குள் சரக்கு ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கறம்பக்குடி போலீசில் தெய்வேந்திரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோவிற்கு தீவைத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Similar News