உள்ளூர் செய்திகள்
போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2022-02-02 10:47 IST   |   Update On 2022-02-02 10:47:00 IST
எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தால் எஸ்.குளவாய்பட்டி. வெண்ணாவல்குடி, சேந்தாக்குடி, கத்தக்குருச்சி, பாலையூர், வேங்கிடக்குளம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்து பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக  இந்த நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இதனால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நிலையத்தின் முன்பு விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். மேலும் நெல் மூட்டைகளை விவசாயிகள் இரவும் பகலுமாக அங்கேயே தங்கி காவல் காத்து வருகின்றனர்.
 
உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கலெக்டர் கவிதாராமுவை, எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதிராஜா சந்தித்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்க மனுகொடுத்தார். ஆனால் இது நாள் வரை கலெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், புதுக்கோட்டை அறந்தாங்கி எஸ்.குளவாய்ப்பட்டி சாலையில் நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகளை குவித்து சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, திருவரங்குளம் ஒன்றிய வட்டார ஆணையர் கோகுல கிருஷ்ணன், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் வல்லாத்திராக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தற்போதைய இடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்காது என்றும், அதன் அருகே உள்ள முத்துப்பட்டினம் ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தற்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News