உள்ளூர் செய்திகள்
ஆய்வு செய்த காட்சி.

ஆலங்குடி அருகே உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க நடவடிக்கை

Published On 2022-01-31 09:36 IST   |   Update On 2022-01-31 09:36:00 IST
ஆலங்குடி அருகே உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன் குண்டு கிராமத்தில் மாவட்ட கலெக்டரின் அனும தியைப் பெற்று உண்டு உறை விடப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் எல்.என் புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டில் சுமார் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஓரிரு வீடுகளைத் தவிர அனைவருமே சுவரில்லாத கீற்றுக் கொட்டகைகளுக்குள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களது குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் புளிச்சங்காடு, பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை, எல்.என் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்கிறபோது, வீட்டில் தனியே விட்டுவிட முடியாமல் குழந்தைகளையும் அழைத்து சென்றுவிடுகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, சுக்கிரன்குண்டு கிராமத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.  அப்போது, அங்குள்ள பெற்றோர்களிடம் இப்பகுதி குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர என்னாலான உதவிகளை செய்வேன் என்று கூறியதோடு,

மாவட்ட கலெக்டரிடம் அனுமதி  பெற்று  இப்பகுதியில் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கற்றல் உபகரணங்கள் வழங்கி, இல்லம்தேடி கல்வித் திட்டம் மூலம் குழந்தைகளின் கற்றல் பணி வலுப்படுத்தப்படும் என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் வந்து பேசியது, இங்குள்ள பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, அறந்தாங்கி பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி, செரியலூர் இனாம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News