உள்ளூர் செய்திகள்
கைது

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைதானதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் - 100 பேர் கைது

Published On 2022-01-30 16:01 IST   |   Update On 2022-01-30 16:01:00 IST
விராலிமலை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைதானதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது தொடர்பாக 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திராபட்டியை சேர்ந்தவர் கணேஷ்பாபு. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் தற்போது ஆர்.எஸ்எஸ். புதுக்கோட்டை மாவட்ட செய்தி பிரிவு தொடர்பாளராக இருந்து வருகிறார்.

இலுப்பூர் அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி ராணி (வயது 50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலுப்பூர் தின்னியம்பட்டியில் மதம் மாற்றும் பிரசாரத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கணேஷ் பாபு சொந்த வேலை காரணமாக தின்னியம்பட்டிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணியிடம் இங்கு மாத மாற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு ராணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு, ராணியின் செல்போன் மற்றும் அவரது மொபட்டை பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து ராணி இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்குபதிவு செய்து கணேஷ் பாபுவை கைது செய்தார்.

இந்த தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை இலுப்பூர் பஸ் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திரு மண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News