உள்ளூர் செய்திகள்
கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
புதுக்கோட்டையில் பிரதோச விழாவில் பங்கேற்ற பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரின் மத்திய பகுதியில் உள்ளது இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் திருக்கோவில்.
இங்கு நேற்று மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் சிறப்பு வழிபாடு சமயத்தில் சின்னப்பா நகர் மூன்றாம் வீதியை சேர்ந்த ராஜரெத்தினம் மனைவி நீலாவதி (வயது 63) என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துள்ளனர்.
இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும் அந்த மர்ம நபர் யார் என தெரியவில்லை. கோவிலில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து நகர காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.