உள்ளூர் செய்திகள்
பெற்றோருடன் மாணவி ராகவி

அரசு சலுகையில் தனியார் பள்ளியில் பயின்றதால் மாணவியின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியானது

Update: 2022-01-28 05:42 GMT
அரசு சலுகையில் தனியார் பள்ளியில் பயின்றதால் மாணவியின் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குறியானது
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநெல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தூய்மைப் பணியாளர் முனுச்சாமி. இவரது மகள் ராகவி (வயது 20). இவர் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவி என்பதால் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வா கம் சார்பில், அரசின் சலுகையில் தனியார் பள்ளியில் படிக்க அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து அரசு உதவியோடு மேல்நிலை கல் வியான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவி அதில் 297 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு தமிழக அரசின் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் 23-வது இடம் கிடைத்தும், அரசின் சலுகையில் தனியார்ப்பள்ளியில் பயின்ற காரணத்திற்க்காக மாணவி 2,036-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள் ளார். இதனால் மாணவியின் நீண்ட நாள் மருத்துவ கனவு தவிடுபொடியாகியுள்ளது. 

இது தொடர்பாக மாணவி கூறுகையில், அரசாணையின்படி, அரசின் சலுகையில் நான் தனியார் பள்ளியில் படித்தேன். பணம் கட்டி படிக்க சொல்லியிருந்தால் கண்டிப்பாக நான் தனியார் பள்ளிக்கு சென்றிருக்கமாட்டேன். ஆனால் தமிழக அரசு தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உள் ஒதுக்கீட்டில் இடம் இல்லை என அறிவித்துள்ளது. 

இதனால் என்னை போன்ற ஏழை மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஆர்.டி.இ. மூலம் தனியார் பள்ளியில் படித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் நானும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் படித்தேன். ஆனால் இதற்கு மட்டும் தனியார் பள்ளியில் படித்ததாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் என்னைப் போன்ற ஏழை மாணவிகளின் சாதனைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News