உள்ளூர் செய்திகள்
பயிற்சி டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் கலெக்டர் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரியில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாதம் சம்பளம் நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் மனு அளித்தனர்.
அவர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அருகே அமர்ந்து அவர்கள் சம்பளம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறுகையில்:-
கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.ஆஸ்பத்திரியில் உள்ள பயிற்சி டாக்டர்கள் 100 பேரில் 50 பேர் ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். படிக்கும்போதே கஷ்டப்பட்டு படித்தோம். ஆனால் இப்போது வேலை பார்ப்பதற்கு கூட சம்பளம் கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் திண்டாடுகிறோம். கடன்வாங்கி அந்த பணத்தில் சாப்பிட்டு வருகிறோம்.
சம்பளம் வழங்க கோரி பலமுறை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் இன்று 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.