உள்ளூர் செய்திகள்
காளை மாடுகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம்
மாடு விடும் விழா நடத்த அனுமதிக்கக் கோரி காளை மாடுகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாடு விடும்விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட எருதுவிடும் பாதுகாப்பு மற்றும் ரசிகர் சங்கம் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து கிரீன் சர்க்கிளில் இருந்து காளை மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் எருது விடும் விழா பாதுகாப்பு சங்க கவுரவத் தலைவர் பாபு, பத்மநாபன், சரவணன், வக்கீல் பாபு உட்பட 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கலெக்டர் அலுவலக கேட் மூடப்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.
வருகிற பொங்கல் பண்டிகைக்கு மாடு விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும். மாடு விடும் விழா விற்கு தடை விதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தற்போது அதிகரித்து வருகிறது. நோய் பரவல் குறைந்தவுடன் அனைத்து பகுதியிலும் நடத்த அனுமதிக்க பரிசீலனை செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மனு கொடுக்க வந்த ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு நீண்டநேரம் திரண்டிருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.