உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை

Published On 2022-01-06 14:59 IST   |   Update On 2022-01-06 14:59:00 IST
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி வேலூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மதம் சார்ந்த திருவிழாக்கள் கூட்டம் நடத்த தடை செய்யப்படுகிறது. அனைத்து வணிக வளாகங்கள் ஷோரூம்கள் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக் கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

ஓட்டல்கள் டீக்கடைகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் கண்டக்டர் டிரைவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

வாடகை மற்றும் கார்களில் டிரைவர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வாடகை ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள் பெரிய அரங்குகள் அருங்காட்சியங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கையுடன் செயல்படலாம்.திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்குள் கலந்து கொள்ளலாம்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு பஸ் ரெயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லை.

வேலூர் மாவட்ட எல்லைகளில் இது தொடர்பாக போலீசார் மூலம் கண்காணிக்கப்படும்.

முக கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு எந்தவித பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோய் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News