உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 65 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2022-01-05 12:59 IST   |   Update On 2022-01-05 12:59:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,731 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குரோம்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனத்தில் 65 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் மட்டும் சுமார் 1,600 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்டமாக 1,417 மாணவ-மாணவிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மாணவிகள் ஆவர்.

இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கு சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து கல்வி நிறுவனத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Similar News