உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் - கலெக்டர் உத்தரவு
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.
இதில் பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, 9-வது மைல் சூட்டிங் மட்டம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தனரா? என்பதனை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை சிறிது நேரம் கண்காணித்து, பின்னர் அவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 5 லட்சத்து 17,897 பேர், 2-ம் தவணையாக 4 லட்சத்து 91,769 பேர் என மொத்தம் 10 லட்சத்து 9,666 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் பைன் பாரஸ்ட் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், குப்பைகளை சாலையோரங்களில் கொட்டுவதை தவிர்க்கவும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.