உள்ளூர் செய்திகள்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் மலைக்கோடியில் 46-வது ஜெயந்தி விழாவையொட்டி சக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம் நடந்த காட்சி

ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஜெயந்தி விழா

Published On 2022-01-03 15:28 IST   |   Update On 2022-01-03 15:28:00 IST
வேலூர் ஸ்ரீபுரத்தில் 46-வது ஜெயந்தி விழாவையொட்டி சக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
வேலூர்:

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 46-வது ஜெயந்தி விழா இன்று நடந்தது. நாராயணி பள்ளியிலிருந்து மேளதாளங்கள், செண்டை மேளம் முழங்க யானை, குதிரைகள் அணிவகுத்து வர ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை தட்டு ஏந்தி வந்தனர். 

இதையடுத்து சக்தி அம்மாவுக்கு பெண் பக்தர்கள் பாதபூஜை செய்தனர் பின்னர் மலர் அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் நல ஆணையர் விஜய் சாம்ளா சக்தி அம்மாவுக்கு தீபாராதனை செய்தார்.

நிகழ்ச்சியில் சக்தி அம்மா பேசியதாவது:-

மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் பக்தி. பக்தி இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம். தெய்வத்தின் மீது நாம் வைக்கும் அன்புக்கு பெயர்தான் பக்தி. தெய்வத்தின் மீது வைக்கும் அன்பு நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் வாழ்வில் பெரிய பலமாக அமையும். துன்பம் நம்மை விட்டு அகலும். 

பக்தி இருந்தால் துன்பங்கள், பிரச்சினைகளில் இருந்து வெளி வந்துவிடலாம். வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். ஞானம், தெளிவு, அமைதி, ஆரோக்கியம், அன்பு, பரி பூரணம் இவற்றையெல்லாம் தருவது பக்தியாகும். அம்மாவின் அருளை பக்தியுடன் நாம் உறுதியாக பிடித்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி, ராமச்சந்திர ரெட்டி, திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயலாளர் தர்மா ரெட்டி, எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், நாராயணி, மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ் பாபு, மேலாளர் சம்பத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News