உள்ளூர் செய்திகள்
விதவைப் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தப்பிய காதலன் - போலீசார் தீவிர விசாரணை
கேளம்பாக்கம் விதவைப் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தப்பிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஷா இன் ஷா (வயது26). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து ஷா இன் ஷா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் ஷா இன் ஷா மட்டுதனியாக இருந்தார். அவரது தாய் மற்றும் மகன்கள் வெளியில் சென்று இருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து ஷா இன் ஷாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மகள் ஷா இன் ஷா கட்டிலில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வண்டலூர் உதவி ஆணையர் (பொறுப்பு) சிங்காரவேலு உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ஷா இன் ஷா டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. பாலவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஷா இன் ஷா நெருங்கி பழகி வந்துள்ளார். இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.
சம்பவத்தன்று ஷா இன் ஷாவின் வீட்டுக்கு காதலன் வந்து சென்றதாக தெரிகிறது. எனவே அவர் ஷா இன் ஷாவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்தள்ளது. அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.