உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் போக்குவரத்து விதிமீறியதாக 2.31 லட்சம் பேர் மீது வழக்கு

Published On 2022-01-02 14:15 IST   |   Update On 2022-01-02 14:15:00 IST
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு போக்குவரத்து விதி மீறியதாக 2.31 லட்சம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
ஊட்டி:

கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 2.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏதுமற்ற ஒரு ஆண்டாக 2021 முடிவடைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில்  76 குற்ற வழக்குகளும், 2021-ம் ஆண்டில் 97 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளது.  

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக 2021-ம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 810 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 346 வழக்குகள் ,அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 1432 வழக்குகள், 

செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியது தொடர்பாக 4099 வழக்குகள், சீட் அணியாதது தொடர்பாக 36 ஆயிரத்து 140 வழக்குகள்,  இதர வழக்குகள் 63 ஆயிரத்து   943  என  2 லட்சத்து 31 ஆயிரத்து 768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்குகளில் 14 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றங்கள் தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 687 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. சைபர் கிரைம் செல்போன் காணாமல் போனதாக 349 புகார்கள் பெறப்பட்டு அதில் 72 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக் கப்பட்டன. 

ஆன்லைன் பண மோசடி தொடர்பாக 286 புகார்கள் பெறப்பட்டு, விசாரணை மேற்கொண்டு 40 லட்சத்து 63 ஆயிரத்து 780 பணம் கைப்பற்றப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்பனை தொடர்பாக 318 வழக்குகள் விற்பனை செய்யப்பட்டு 171 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

நக்சல் தடுப்பு பிரிவினர்   391 முறை எல்லையோரங்களில் தணிக்கை செய்தும், 381 முறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

எல்லையோர பழங்குடியினர் கிராமங்களில் 6 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,187 பழங்குடியின மக்களிடமிருந்து 956 மனுக்கள் பெறப்பட்டது. 

இதில் பழங்குடியின மக்களுக்கு 262 சாதி சான்றிதழ்கள், 66 முதியோர் உதவித்தொகை, 735 குடும்ப அட்டைகள், 89 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. 

போலீசார் குற்றங்களைக் கண்டுபிடித்து தடுப்பது, பொது அமைதி காப்பது உள்ளிட்டவற்றுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்து உள்ளனர். இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்

Similar News