உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு
வேலூர் மாவட்டத்தில் இன்று 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 50,543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1,143 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் பலியானார்கள்.
கடந்த வாரம் வரை 20& க்கும் கீழ் பாதிப்பு இருந்தது. இன்று ஒரே நாளில் 71 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 32 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன ஒரே தெருவில் 4 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெருக்கள் மூடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை செய்யப்படுகிறது.
இது தவிர ஆந்திர எல்லைகளில் தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். பின்னர் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வெளியே நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு 209 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்தது
வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 10 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர்.அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை. தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கொரோனா பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.