உள்ளூர் செய்திகள்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட தடை- போலீசார் கடும் எச்சரிக்கை
ரெசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த இடங்களில் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடையாது.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி நாளை இரவு மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இதனால் மக்கள் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். கோவில்கள், தேவாலயம் போன்ற வழிபாட்டு தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும், பூங்கா மற்றும் அணை போன்ற இடங்களில் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
நாளை இரவு காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி மது அருந்தி ஓட்டினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, ரெயிலிலும், பஸ்சிலும் பயணிக்க வேண்டும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இதனால் விபத்துகளை தவிர்க்கலாம். அவசரத்தேவைகளுக்காக 4 சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர வேண்டும். ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும்.
ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என ஓட்டல் நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரெசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த இடங்களில் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடையாது.
வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது (காவலன் எஸ்.ஓ.எஸ்.) என ஆப் ஐ பயன்படுத்தலாம்.
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தின பாதுகாப்பிற்காக மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.