உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு

Published On 2021-12-28 12:59 IST   |   Update On 2021-12-28 12:59:00 IST
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டண கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சிற்பங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரையும் என புராதன சிற்ப பகுதிகள் மூடப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா முடங்கியது.

தமிழக அரசின் தளர்வுகளை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சிற்ப பகுதிகள் திறக்கப்பட்டன. பிறகு வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தொல்லியல் துறை நிர்வாகம் கொரோனா தொற்று சூழல் கருதி நுழைவு சீட்டை கவுன்ட்டர்களில் வழங்காமல் இணைய வழியாக மட்டுமே வழங்கியது. சாதாரண மொபைல் போன் பயன்படுத்துவோர், இத்தகைய சீட்டை பெற இயலாமல் அவதியுற்று வந்தனர். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரும் சிக்னல் நெட்வொர்க் கிடைக்காத சிக்கலால் கியூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்யவும், இணைய கட்டணம் செலுத்தவும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாமல் பரிதவித்து வந்தனர்.

இதை சாதகமாக்கி புரோக்கர்கள் அவரவர் மொபைல் போனில் நுழைவு சீட்டு பதிவிறக்கி ரூ.40 நுழைவு கட்டணத்திற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பயணிகளிடம் ஏமாற்றி கட்டணம் வசூலித்தனர். இந்த சிக்கலை தவிர்க்க, கட்டண கவுன்ட்டரில் நுழைவு சீட்டு வழங்க வேண்டிய அவசியம் குறித்து சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து பரிசீலித்த தொல்லியல் துறை மீண்டும் கட்டண கவுன்ட்டரில் நுழைவுசீட்டு வழங்கும் பணியை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று புராதன சின்னங்களை பார்த்து மகிழ்ந்ததை காண முடிந்தது. இணைய வழி இணைப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் இதுவரை இணைய வழி நுழைவு சீட்டு பெற அவதிக்குள்ளாகி வந்தனர். தற்போது நுழைவு கட்டண மையங்கள் திறக்கப்பட்டு, நுழைவு சீட்டு வழங்குவது தொடங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News