உள்ளூர் செய்திகள்
கையில் ஸ்பிரேயுடன் வருவதையும், கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடிப்பதையும் படத்தில் காணலாம்.

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் கட்டிட தொழிலாளர்கள் 25 பேரிடம் விசாரணை

Published On 2021-12-18 10:06 GMT   |   Update On 2021-12-18 10:06 GMT
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் பெயிண்ட் ஸ்பிரே அடித்து கண்காணிப்பு கேமராக்களை மறைத்து பின்னர் நகைகளை கொள்ளைஅடித்து சென்றான்.

இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி மற்றும் தலையில் தலைமுடி விக் அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது.

அந்த நபர் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு தடைப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மேலும் காட்பாடி சாலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த ஆட்டோ சம்பந்தமில்லாமல் நள்ளிரவு நேரத்தில் கடையின் முன்பு ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்வியை அடிப்படையாக கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோவில் இருந்த நபர் நகைக்கடையின் காவலாளியை திசைதிருப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களின் கூட்டாளி ஒருவர் காவலாளியை திசை திருப்பி கடையின் பின்புறம் மற்றொரு கொள்ளையர் சுவரை துளையிட்டு உள்ளே சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த ஆட்டோ எண் முழுமையாக தெரியவில்லை. அந்த மர்ம ஆட்டோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளைபோன நகை கடையின் அருகே காலி இடத்தை ஒட்டியவாறு தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தங்கும் விடுதியில் கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளர்கள் 25 பேரின் புகைப்படம்- கைரேகைகள் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News