உள்ளூர் செய்திகள்
போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2021-12-17 11:27 GMT   |   Update On 2021-12-17 11:27 GMT
ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் ஓட்டேரியில் உள்ளது ஆதி திராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர் தங்கி உள்ளனர்.

இதில் கடந்த 10 ஆண்டுகளாக வார்டனாக பணியாற்றி வந்தவர் சண்முகம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதா ஆதிதிராவிடர் விடுதியில் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது உடல் நலம் சரி இல்லாததால் விடுதியின் வார்டன் வெளியே சென்றுள்ளார்.

விடுதியில் இல்லை என்பதால் சண்முகத்தை இடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அருகில் உள்ள பாலிடெக்னிக் விடுதியின் வார்டனாக கருணாநிதியை தற்காலிகமாக நியமித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறினர். நேர்முக உதவியாளரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது அலுவலகத்தில் இருந்த மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News