தாம்பரம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதை
தாம்பரம்:
சென்னையையொட்டி உள்ள தாம்பரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பெருக்கத்தின் காரணமாக தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வதற்கு வசதியாக சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முன்மொழியப்பட்ட ஆய்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு ரூ.50 லட்சத்தை அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை தேசிய சாலையில் வருகிறது. இதன் மூலம் சேலையூர் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் போக்குவரத்திற்கு காத்திருக்காமல் எளிதில் கடந்து செல்ல வசதியாக இருக்கும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.