சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் புதிய நடவடிக்கையை எடுக்க உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய நடவடிக்கை
பதிவு: டிசம்பர் 14, 2021 06:37 IST
மாற்றம்: டிசம்பர் 14, 2021 07:26 IST
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய நடவடிக்கை
சென்னை:
டெல்லியில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு உள்ளிட்டவற்றை குறைக்கும் வகையில் வாகன கட்டுப்பாடு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டில் முன்னோடியாக உள்ள இந்த திட்டத்தில் அரசு பணியாளர்களும் அவற்றை கடைப்பிடித்து வருகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வியட்னாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வருகிற 2025ம் ஆண்டுக்கு பின் முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஹனோய் நகரில் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் இயக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனி நபர்கள் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து இந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று, சென்னையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, தி.நகர் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளனர். கணேசபுரத்தில் ரூ.142 கோடி செலவில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.
அதேபோல ஓட்டேரியில் ரூ.62 கோடி செலவில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலமும், தி.நகர் உஸ்மான் சாலையில் 1,200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது எந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்பது மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின்னரே தெரிய வரும்.
இதையும் படியுங்கள்...சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்