உள்ளூர் செய்திகள்
துறைமங்கலம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு துறைமங்கலம் கே.கே.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை குடிநீர் வினியோகிக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலையில் திடீரென்று பெரம்பலூர்-துறைமங்கலம் மூன்று ரோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்று பாதையான நான்கு ரோடு வழியாக திருப்பி விட்டனர். இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்