பெரம்பலூர் நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் - ஆணையர் எச்சரிக்கை
பெரம்பலூர்:
நகராட்சி ஆணையர் குமரிமன்னன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகள், பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள கடைகள், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி சொந்தமான கடைகள் ஆகியவற்றின் வாடகை தொகை செலுத்தாத உரிமதாரர்களுக்கு வாடகை செலுத்தவேண்டி நகராட்சி மூலம் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக வாடகையை செலுத்த வேண்டும். மீறி வாடகை செலுத்தாவர்களின் கடைகள் நகராட்சி சட்ட விதிகளின் படி பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.செலுத்த தவறினால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.