உள்ளூர் செய்திகள்
பேரளி, பீல்வாடி கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு

Published On 2021-12-07 16:16 IST   |   Update On 2021-12-07 16:16:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் தாமஸ் பாஸ்கர் தலைமையில் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், இந்த ஆண்டு கொரோனா மற்றும் தேர்தல் ஆகிய காரணங்களால் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி பெற்று தரவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், அரசலூர், கள்ளப்பட்டி, விசுவக்குடி, பூலாம்பாடி, தொண்டமாந்துறை, கொளத்தூர், சில்லக்குடி ஆகிய கிராமங்களில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுத்தரவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகாவில் உள்ள பேரளி, பீல்வாடி ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பீல்வாடியில் இருந்து பேரளி செல்லும் பகுதிகளில் விவசாய விளை நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. அந்த பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று தனிநபர் ஒருவர் எம்சாண்ட் செயற்கை மணல் தயாரிக்கவும், தார் உற்பத்தி செய்யும் நிறுவனம், கிரஷர் அமைக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறார். இதனால் விவசாய விளை நிலங்களும், காப்பு காடுகளும், அதில் வசிக்கும் வன விலங்களும் பாதிக்கப்படும்.

இது தொடர்பாக பேரளி, சித்தளி ஊராட்சிகளில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், விவசாயம், வன விலங்குகள் ஆகியவற்றின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அவருக்கு மேற்கண்டவை அமைக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால் ஊர் பொதுமக்களை திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என்று கூறியிருந்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு நேற்றுதான் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை கணினியில் பதிவு செய்து கலெக்டரிடம் அளித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 438 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

Similar News