உள்ளூர் செய்திகள்
மரணம்

வேலூர் அருகே திடீர் வாந்தி, பேதியால் முதியவர்-சிறுவன் பலி

Published On 2021-12-03 13:21 GMT   |   Update On 2021-12-03 13:21 GMT
வேலூர் அருகே திடீர் வாந்தி பேதியால் 2 பேர் இறந்துள்ளதும் மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் அந்த பகுதியில் காலரா பீதி ஏற்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பாசாமி (வயது70). என்பவருக்கு திடீர் வாந்தி பேதி ஏற்பட்டது.

இதேபோல கலீத்குமார் (4) என்ற சிறுவனுக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் வீடு திரும்பிய முதியவர் மற்றும் சிறுவன் இருவரும் நேற்று இறந்தனர். மேலும் அந்த கிராமத்தில் சுமார் 20 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

வாந்தி பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் காலரா பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்த கிராமத்திற்கு சப்ளை செய்யப்படும் குடிநீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலையில் அல்லிவரம் கிராமத்திற்கு சென்று பலியான சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் அல்லிவரம் கிராமத்தில் உள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டனர்.

அங்குள்ள குளத்தின் அருகே மழை வெள்ளம் வெளியே செல்ல முடியாதபடி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைத்தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

சுகாதார குழுவினரை 24 மணி நேரமும் கிராமத்தில் இருக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திடீர் வாந்தி பேதியால் 2 பேர் இறந்துள்ளதும் மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் அந்த பகுதியில் காலரா பீதி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News