செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

கல்லூரி சான்றிதழுக்கு ஜி.எஸ்.டி. வரி மாணவர்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Published On 2021-11-26 03:31 GMT   |   Update On 2021-11-26 03:31 GMT
கல்லூரி சான்றிதழுக்கு ஜி.எஸ்.டி. வரியால் மாணவர்கள்-பெற்றோர்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் சேவைகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) செலுத்தப்பட வேண்டும் என்றும், 2017-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், வரி பிடித்தம் செய்திருந்தால் அதை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும், வரி பிடிக்கப்பட்டிருந்தால் கிட்டத்தட்ட ரூ.16 கோடி அரசுக்கு வரி கிடைத்திருக்கும் என்றும், இந்த வருவாயை இனியும் இழக்காமல் மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் வணிக வரித்துறை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளதாக செய்தி வந்துள்ளது.

அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் 500-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளதாகவும், அதில் இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18 சதவீத வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச்சான்றிதழ், பட்டச்சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18 சதவீத வரியும், தொலைந்து போன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு செலுத்தும் கட்டணத்தில் 18 சதவீத வரியும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தில் 18 சதவீதம் வரியும் வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கு என புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதன்படி ஒரு சான்றிதழுக்கு ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றால் 180 ரூபாயை வரியாக ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் கூடுதலாக செலுத்த வேண்டும்.



இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில், குறிப்பாக ஏழை-எளிய, நடுத்தர வகுப்பு மாணவ-மாணவிகள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. இன்றைக்கு சான்றிதழ்களுக்கான கட்டணத்தில் ஆரம்பித்து பிற்காலத்தில் பிற இனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டால் ஏழை-எளிய மாணவர்களுடைய பெற்றோர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, சான்றிதழ்களுக்கான 18 சதவீத வரி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News