செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம்-தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-11-24 07:35 GMT   |   Update On 2021-11-24 07:35 GMT
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறுசெல்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை அகலமாக இருந்தது. ஒரே சமயத்தில் எதிரெதிராக இரண்டு கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலமான பாதையாகும். 

சில வருடங்களுக்கு முன்பாக பேரூராட்சியின் சார்பாக எந்தவிதமான அளவீடும் செய்யாமல் சிமெண்டு பாதை அமைக்கப்பட்டது. இதனால் அந்தப் பாதை குறுகியபாதையாக மாறியது. சிமெண்டுபாதை போக மீதமிருந்த செம்மண் பாதையானது நாளடைவில் மண் அரிப்பினால் கரைந்து காணாமல் போனது.

தற்போது சிமெண்டு பாதையும் சேதமடைந்து மழையினால் அரிப்பும் ஏற்பட்டு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. குண்டும் குழியுமாக பொதுமக்கள் உபயோகத்திற்கு மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஆற்றுக்கு போகும் பகுதியில் இருபுறமும் புதர் மண்டி கிடைக்கிறது.

ஆற்றின் படித்துறை இடிந்தும் சிதைந்தும் காணப்படுகிறது. மேலும் ஆற்றின் கரையில்  மது பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றுக்குச் செல்வது ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆற்றுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதால் மேலும் பாதையின் அளவு குறைந்து ஒத்தையடிப் பாதையாக மாறியுள்ளது. எனவே குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் ஆற்றுக்கு செல்லும் பாதையை மறுஅளவீடு செய்து இரண்டு புறமும் தடுப்பு சுவர் அமைத்து விரிவாக்கம் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறுசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டு தரைபாலங்களைத் தாண்டி தண்ணீர் செல்கிறது.

உப்பாறு ஓடையில் நீர் செல்லும் இடங்களில் ஓடையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பாலங்கள் கட்டப்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிசெல்கின்றனர். இதனால் பாலத்தின் அடிப்பகுதியில், தண்ணீர் செல்லும் நீர் வழித்தடங்களில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.

மழைக்காலங்களில் ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்லும் போது கழிவுகள் நீர் வழித் தடங்களை அடைத்துக் கொள்கிறது. இதனால் தண்ணீர் பல இடங்களில் வீணாகி வருகிறது.குடிமங்கலம் பகுதியில் விவசாயத்துடன் இணைந்து தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது.

கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு உப்பாறு ஓடை பயன்படுகிறது. உப்பாறு ஓடையில்கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உப்பாறு ஓடையை தூர்வார வேண்டும்.உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. சுமார் 4.82 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குட்டை சுற்று வட்டார பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு ஓரளவு பெய்த பருவமழை காரணமாக குளத்தில் சிறிதளவு தண்ணீர் காணப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குட்டை நிரம்பி உள்ளது. ஆனால் பல ஏக்கர் பரப்பளவில் குட்டை மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்க வேண்டிய நிலையில் குட்டை முழுவதும் சீமக்கருவேல மரங்களாக காட்சியளிக்கிறது.

இதேபோல் ராக்கியாபாளையம், அம்மன்நகர், மகாலட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக சென்று நேரடியாக குட்டையில் கலந்து வருகிறது. இதனால் குட்டையில் உள்ள நீர் மாசுபடுவதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் குட்டையின் எதிர்புறம் உள்ள பெரிய பள்ளத்தில் சொர்ணபுரி கார்டனில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்து தேங்கி நிற்கின்றன. நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே குட்டை மற்றும் நிலத்தடி நீர் மாசுபடாமல் பாதுகாக்க பல்வேறு பகுதியில் இருந்து குட்டையில் வந்து கலக்கும் கழிவுநீரை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சொர்ணபுரி கார்டன் பகுதியில் இருந்து வெளியேறி, குட்டையின் எதிர்புறம் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News