செய்திகள்
5 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-11-17 11:03 GMT   |   Update On 2021-11-17 11:03 GMT
சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீர்காழி:

நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினத்திலிருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்த மாணவர்களிடம் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர் மற்றும் முகவரியை விசாரித்தனராம். அதற்கு கல்லூரி மாணவர்கள் ஏன் விசாரிக்கிறார்கள் என்று கேட்டபோது விவரம் ஏதும் கூறாமல் மர்ம நபர்கள் சென்று விட்டனராம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் நாகப்பட்டினத்தில் இருந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து வந்த மாணவர்கள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது சீர்காழி தாடாளன் மேலவீதியை சேர்ந்த பொறியியல் மாணவர் சந்தோஷ் குமார் (18) இதுகுறித்து கேட்டபோது அந்த மாணவரை தகாத வார்தைகளால் திட்டி அடித்த அந்த நபர்கள் அவருடன் இருந்த சக நண்பர்களை கல்லால் அடிக்க முயன்றுள்ளனர். மேலும் கல்லூரி பேருந்தை உடைத்து, கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 பேர் தப்பிச் சென்றுவிட்டனராம்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறு கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பொதுமக்கள் ஒன்று கூடி விட்டனர். இது குறித்து அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீர்காழி கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், அடித்து கல்லூரி பேருந்தை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற 5 பேர் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News