செய்திகள்
மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்கள் அதிகரிப்பு

மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்கள் அதிகரிப்பு - அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசனை

Published On 2021-11-17 08:19 GMT   |   Update On 2021-11-17 09:50 GMT
நகரங்களை பொறுத்த வரையில் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கணக்கின் படி குடிசைப்பகுதிகளில் 40 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 48 சதவீதம் பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தெரிய வந்துள்ளது.

சென்னை:

கொரோனா கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி தொடர்ந்து இருந்து வருகிறது.

நாட்டில் தற்போது நோய் தொற்று குறைந்து இருந்தாலும் கட்டுப்பாடுகளை முற்றிலும் விலக்கவில்லை. எனவே முகக்கவசம் தொடர்ந்துஅணிய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பலர் இப்போது முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். கொரோனா பயம் இல்லாததால் முகக்கவசத்தை தூக்கி எறிந்து விட்டு சாதாரணமாக நடமாடுகிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்பவர்கள் போலீசார் பிடிப்பார்கள் என்பதால் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள். மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பஸ்கள், ரெயில்களில் பொதுமக்களில் பலர் முகக்கவசம் இல்லாமலே காணப்படுகிறார்கள்.

அப்படி முகக்கவசம் அணிந்திருந்தாலும் அது முழுமையாக மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைப்பது போல் அணிவதில்லை. பெரும்பாலானோர் கழுத்தில் தொங்கப்போட்டு செல்கிறார்கள்.

இதற்கு முன்பு முகக்கவசம் அணியாதவர்களை பலர் கடைகளில் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது கடைக்காரர்கள் கண்டு கொள்வதில்லை. சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி இதையெல்லாம் கண்காணித்து வந்தனர். ஆனால் இப்போது இந்த கண்காணிப்பு முடங்கி விட்டதால் மக்கள் மிகவும் அலட்சியமாக காணப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்த வரையில் வடசென்னை பகுதியில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலேயே இருக்கிறார்கள். அந்த பகுதியில் நெருக்கடியான கடைவீதிகள் இருக்கின்றன. கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

முகக்கவசம் அணியாமல் செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, “கொரோனா பணிகளை தீவிரமாக கவனித்து வந்த நிலையில் தற்போது வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனவே அதில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். எங்களது குழுக்கள் தற்போது வெள்ளப்பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் கொரேனா விவகாரங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தொற்றுநோய் தடுப்பு துணை இயக்குனர் பிரபா தீப் கவுர் கூறும்போது, “தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி மக்களிடம் முகக்கவசம் அணிந்திருப்பது குறைந்திருக்கிறது. வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது கண்டிப்பாக நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

யார் தடுப்பூசி போட்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியாது. எனவே முகக்கவசம் அணிந்தால் தான் நம்மை காப்பாற்றி கொள்ள முடியும் குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, “ தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேல் உள்ள தடுப்பூசி போடாதவர்கள், ஒரு ஊசி மட்டும் போட்டவர்கள் மத்தியில் நோய் பரவி உயிரிழப்பது அதிகமாக இருக்கிறது. அதேபோல இணை நோய் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதால் பல்வேறு சுவாச நோய்களை தடுக்க முடியும்” என்று கூறினார்.

மற்றொரு சுகாதார அதிகாரி கூறும்போது, “முகக்கவசம் அணிவது குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இதை கட்டாயமாக அணிவதுடன் கொரோனா பாதுகாப்பு முறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது” என்று கூறினார்.

நகரங்களை பொறுத்த வரையில் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கணக்கின் படி குடிசைப்பகுதிகளில் 40 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 48 சதவீதம் பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்...காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு 21-ந்தேதி வரை விடுமுறை

Tags:    

Similar News