செய்திகள்
மழை

தமிழகத்தில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்

Published On 2021-11-12 04:17 GMT   |   Update On 2021-11-12 07:12 GMT
தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை தமிழகத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது 40 செ.மீ. வரை மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் அதிகம். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 122 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

அதற்கடுத்தபடியாக திருவாரூர் மாவட்டத்தில் 110 சதவீதமும், கோவையில் 103 சதவீதமும், அரியலூரில் 95 சதவீதமும் அதிகமாக மழை பெய்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் இந்த பருவமழை காலத்தில் 77 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News