செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரை ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் கொரோனாவுக்கு பலி

Published On 2021-11-08 06:44 GMT   |   Update On 2021-11-08 06:44 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரை 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
விருதுநகர்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் இதன் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனாவுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா உயிர்பலி எதுவும் நிகழவில்லை.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரை உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்தப்பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரை 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 693 பேர் பலியாகி உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. மழைக்காலம் தொடங்கி விட்டது.

எனவே நோய் பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட தொல்லைகள் வருவது சகஜம் தான். இருந்தபோதிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் நோயை முளையிலேயே கிள்ளி எறிய முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News