செய்திகள்
மூக்கனேரி

சேலம்-ஆத்தூரில் கொட்டிய கன மழை: மூக்கனேரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-11-05 09:53 IST   |   Update On 2021-11-05 09:53:00 IST
சேலம் திருமணி முத்தாறில் ஏற்கனவே தண்ணீர் செல்லும் நிலையில் தற்போது மூக்கனேரியில் இருந்த திறந்து விடப்படும் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

குறிப்பாக சேலம் மாநகரில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

குறிப்பாக பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதேபோல பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயண நகர் உள்பட பல பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியில் ஊற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். சேலம் அருகே உள்ள புது ஏரி நிரம்பிய நிலையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள மூக்கனேரி நேற்றிரவு பெய்த மழையில் நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம் திருமணி முத்தாறில் ஏற்கனவே தண்ணீர் செல்லும் நிலையில் தற்போது மூக்கனேரியில் இருந்த திறந்து விடப்படும் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போல புறநகர் பகுதிகளான ஆத்தூர், பெத்த நாயக்கன்பாளையம் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர், ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 66 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 63.2, பெத்த நாயக்கன்பாளையம் 24, எடப்பாடி 18.4, ஆனைமடுவு 16, வீரகனூர் 13, கரியகோவில் 11, தம்மம்பட்டி 10, ஏற்காடு 10, காடையாம்பட்டி 8, ஓமலூர 5, மேட்டூர் 3.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 248.40 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News