செய்திகள்
திருப்பூரில் கொட்டி தீர்த்த மழையால் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் மண்ணிற்குள் புதைந்தது-அமராவதி ஆற்றில் உபரிநீர் திறப்பு
தொடர் மழையால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இருப்பினும் தீபாவளி பண்டிக்கைகாக ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க இருந்த பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் கடைகளுக்கு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாமல் பெய்தது.
இதனால் திருப்பூர் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் சிதலமடைந்திருந்த சாலைகள் சகதிக்காடாக மாறின. இதனால் அந்த வழியாகசெல்லும் பொது மக்கள் கடும் அவதிக் குள்ளாகினர்.
தொடர் மழையால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இருப்பினும் தீபாவளி பண்டிக்கைகாக ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க இருந்த பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் கடைகளுக்கு சென்றனர். மழையின் காரணமாக தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நல்லம்மன் கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.
இந்தநிலையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திருப்பூர் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனினும் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்றனர். மேலும் நல்லம்மன் கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது.
இந்தநிலையில் திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் குளம் எதிரே ரூ.84 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக கட்டிடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியது. நேற்று பெய்த மழை காரணமாக கட்டிடம் சில அடி தூரம் மண்ணில் புதைந்து வருவதுடன், கட்டிடமும் இடிந்து வருகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கட்டிடம் மண்ணிற்குள் புதைந்து வருகிறது.
எனவே எதிர்ப்பு தெரிவித்தும் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உள்ளது.
உடுமலை அமராவதி அணையில் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவான 90அடியை நெருங்கும் நிலை உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து ஆற்றில் உபரி நீர்திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் இருந்து 2000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அமராவதி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-30, அவிநாசி-29, பல்லடம்-13,ஊத்துக்குளி-32, காங்கேயம்-31, தாராபுரம்-45, மூலனூர்-42, குண்டடம்-52, திருமூர்த்தி அணை-34, திருப்பூர் கலெக்டரேட்-28, திருப்பூர் தெற்கு-30. மாவட்டம் முழுவதும் மொத்தம் 483மி.மீ. மழை பதிவாகியுள்ளது.