மசூதி நோக்கி அம்பு... பெலகாவியில் இந்துத்துவா பெண் ஆர்வலர் மீது வழக்குப் பதிவு!
- அப்துல்காதர் அப்துல்ரஹ்மான் முஜாவர் என்பவர் போலீசில் புகார் செய்தார்.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் மசூதிமீது அம்பு எய்வது போல் சைகை செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்துத்துவா பெண் ஆர்வலர் ஹர்ஷிதா தாக்கூர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெலகாவியில் நடைபெற்ற 'அகண்ட இந்து சம்மேளனம்' ஊர்வலத்தின் போது, ஹர்ஷிதா தாக்கூர் ஒரு வாகனத்தில் நின்றபடி, அங்கிருந்த சையத் அன்சாரி தர்காவை நோக்கி மீண்டும் மீண்டும் அம்பு விடுவது போன்ற சைகைகளைச் செய்தார்.
அதனை கீழே இருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தும் ஊக்குவித்தனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக, பீரன்வாடியைச் சேர்ந்த அப்துல்காதர் அப்துல்ரஹ்மான் முஜாவர் என்பவர் போலீசில் புகார் செய்தார்.
அவர் புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் ஹர்ஷிதா தாக்கூர் மற்றும் ஊர்வல அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீது பெலகாவி ஊரகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார். ராம் நவமி ஊர்வலத்தின் போது அவர் ஒரு மசூதியை நோக்கி அம்பு விடுவது போல் சைகை செய்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.