செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்பு படம்)

79 ஆயிரம் கிராமங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம்- அமைச்சர் தொடங்கிவைத்தார்

Published On 2021-11-02 13:27 GMT   |   Update On 2021-11-02 13:27 GMT
கிராமம், வார்டு எதுவாக இருந்தாலும் ஊசி போட்டவர்கள் யார்-யார்? போடாதவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை கையில் வைத்திருப்பார்கள். ஊசி போடாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஊசி போடுவார்கள்.
சென்னை:

நாடு முழுவதும் நூறு சதவீதம் கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 50 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசியும் இந்த மாத இறுதிக்குள் போட்டு விட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இதையடுத்து கிராமங்களுக்கே நடமாடும் வாகனங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை மதுராந்தகம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் பற்றி மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 5 கோடியே 78 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 4 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 841 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 1 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.



அதாவது 71 சதவீதம் பேர் முதல் தவணையும், 31 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 70 சதவீதம் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காகத்தான் நடமாடும் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி உள்ளோம். மொத்தம் 79 ஆயிரத்து 395 கிராமங்கள், 15 மாநகராட்சிகளிலும், 1,046 வார்டுகள், 121 நகராட் சிகளில் 8 ஆயிரத்து 288 வார்டுகள் மற்றும் 528 பேரூராட்சி பகுதிகள் உள்ளன.

நடமாடும் மருத்துவ குழுவினர் இந்த பகுதிகள் அனைத்துக்கும் செல்வார்கள். மொபைல் வாகனங்களில் டாக்டர், ஊசி போடுபவர், தரவுகளை பதிவு செய்பவர்கள் இருப்பார்கள்.

கிராமம், வார்டு எதுவாக இருந்தாலும் ஊசி போட்டவர்கள் யார்-யார்? போடாதவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை கையில் வைத்திருப்பார்கள். ஊசி போடாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஊசி போடுவார்கள்.

இந்த பணிகளில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.

கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தன்னையும் காத்து, நாட்டையும் காக்கும் வகையில் இந்த திட்டத்தை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News