செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை காணலாம்

தொற்று பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது

Published On 2021-09-30 05:24 GMT   |   Update On 2021-09-30 05:24 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 24 ஆயிரத்து 748 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். கொரோனா பாதித்தவர்களை தவிர்த்து 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் 2-வது டோஸ் செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் இன்றி வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள சூழ்நிலையில், வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்களுக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் செயல்பட தொடங்கி உள்ளது.

அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்தாதவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து செலுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, சுற்றுலா பயணிகள் மூலம் உள்ளூர் மக்கள், சுற்றுலாத் தலங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அங்கு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி இருப்பை பொறுத்து தினமும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தாத பிற மக்களும் போட்டுக்கொள்ளலாம். நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 348 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
Tags:    

Similar News