செய்திகள்
ஊட்டி படகு இல்லத்தில் நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான படகு போட்டி

2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி

Published On 2021-09-28 10:19 IST   |   Update On 2021-09-28 10:19:00 IST
2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊட்டி:

ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சமூக வளர்ச்சிக்கு சுற்றுலா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக நடைபெறும் படகு போட்டி ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு படகு போட்டி நேற்று நடைபெற்றது.

ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். படகு போட்டியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் மிதி படகுகளில் குறிப்பிட்ட எல்லை வரை வேகமாக சென்று கடந்தனர். 2-வது பிரிவு போட்டியின் போது கொட்டும் மழையின் நடுவே நனைந்தபடி சுற்றுலா பயணிகள் படகில் சென்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த திலீப், சுவாமிநாதன் முதல் இடம் பிடித்தனர்.

ஊட்டியை சேர்ந்த மற்ற 2 பேர் 2-வது இடம், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரசாத், சனோக் 3-வது இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசுகளை வழங்கினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், பவானி ஆகியோருக்கு முதல் பரிசு, கோவையை சேர்ந்த சாகுல் ஹமீது, பால்சிஸ் 2-ம் பரிசு, கேரளாவைச் சேர்ந்த பிரவீன், திசா ஆகியோருக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. இதில் ஊட்டச்சத்து உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் தோடர், படுகர் இன மக்களின் நடனம் நடந்தது. உலக சுற்றுலா தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் பங்கேற்று குதூகலம் அடைந்தனர்.

Similar News