செய்திகள்
கோப்புபடம்

வேப்பூரில் தம்பதியை தாக்கி நகை பறித்த பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-09-22 13:36 GMT   |   Update On 2021-09-22 13:36 GMT
வேப்பூரில் தம்பதியை தாக்கி நகையை பறித்த பெண் உள்பட 2 பேர் செல்போன் சிக்னல் மூலம் போலீசில் சிக்கினர்.
வேப்பூர்:

வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை(வயது 74). கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரவு முனியப்பிள்ளை, தனது மனைவி மலருடன் வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன்-மனைவி இருவரையும் தாக்கி மலர் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் நகை பறிக்கப்பட்ட நேரத்தின் போது முனியப்பிள்ளை வசித்த பகுதியில் இருந்து செல்போன்களில் பேசியவர்களின் எண்களை வைத்து, போலீசார் கண்காணித்தனர். இதில் ஒருவரது செல்போன் சிக்னல் வேப்பூர் பகுதியிலும், தஞ்சாவூரிலும் அடுத்தடுத்து காட்டியது. இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த செல்போன் எண்ணை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் அந்த செல்போன் சிக்னல் காட்டியது. உடனே போலீசார் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் விருத்தாசலம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் மனைவி பிரேமலதா(29), அவரது உறவினர் அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(29) என்பதும், ரமேசுடன் சேர்ந்து மலரின் நகையை அவர்கள் பறித்துச் சென்றதும், தற்போது தஞ்சாவூரில் நகையை உருக்கி, அதனை விருத்தாசலத்தில் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேர் மீதும் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரேமலதா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 6½ பவுன் நகையை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News