செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

Published On 2021-09-20 11:29 GMT   |   Update On 2021-09-20 11:29 GMT
கடலூர் மாவட்டத்தில் 640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
கடலூர்:

கொரோனா 3-வது அலை தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முழுமையான அளவில் செயல்படுத்தும் விதமாக கடந்த 12-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக நேற்று மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் இந்த 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 640 இடங்களில் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் வடகிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாஷா, டாக்டர்கள் முத்துக்குமரன், அருண்குமார், ராமலிங்கம், ஜெயலட்சுமி, தாசில்தார் அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், நகர செயலாளர் கந்தன், வருவாய் ஆய்வாளர் ஆதிலட்சுமி, பேரூராட்சி துப்புரவு, சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து புவனகிரி வட்டம் பி.உடையூர், குறிஞ்சிப்பாடி வட்டம் வழுதலம்பட்டு ஆகிய பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துகிறார்களா?, முகாம்களில் அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 640 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News