கள்ளக்காதல் தகராறில் ரவுடி மனைவியை வெட்டிக்கொலை - 4 பேர் கைது
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). இவரது மனைவி காந்திமதி (வயது 27). கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, திருப்பாதி ரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்கிற வீரங்கனை தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் கிருஷ்ணன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது, என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் கிருஷ்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று இரவு குப்பங்குளத்தில் தனது உறவினர் ஆறுமுகம் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், காந்தி மதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே காந்திமதி பரிதாபமாக இறந்தார்.
கொலை சம்பவம் குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திமதியை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காந்திமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் காந்திமதிக்கு மற்றொரு வாலிபருடனும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இதுபற்றி அறிந்த அரவிந்தன் அதிர்ச்சி அடைந்து மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தார். ஆனால் அதனை காந்திமதி கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் காந்திமதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.
அதன்படி அரவிந்தன் தனது நண்பர் ஆறுமுகம் மூலம் காந்திமதியை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்துள்ளார். பின்னர் காந்திமதி வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அரவிந்தன், தனது கூட்டாளிகள் ஆறுமுகம், சக்தி, மதன் ஆகியோருடன் சேர்ந்து காந்திமதியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அரவிந்தன் உள்ளிட்ட 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்தபகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.